செங்கோட்டை கொல்லம் இடையே அகல ரெயில் பாதை பணிகளில் கொல்லம் முதல் புனலூர் வரை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது.
செங்கோட்டை முதல் புனலூர் வரையுள்ள 51 கிலோ மீட்டர் மீட்டர்கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. சுமார் ரூ.350 கோடியில் தொடங்கப்பட்ட இந்த பணி, போதிய நிதி இல்லாமல் தாமதமாகி வந்தது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் செங்கோட்டை புனலூர் ரெயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஆலோசனை கூட்டம் கேரள மாநில எம்.பி.க்கள், பல்வேறு கேரள அமைப்பினர் செங்கோட்டை புனலூர் ரெயில் பாதை பணிகளை விரைந்து முடித்து, ரெயில்களை இயக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கேரள மாநிலம் தென்னைமலை ரெயில்வே விடுதியில் ரெயில்வே அதிகாரிகள், எம்.பி.க்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பிறகு கேரள மாநிலம் கொல்லம் எம்.பி. பிரேமசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புனலூர் செங்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பாதை தென்மலை, ஆரியங்காவு எல்லை பகுதி மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. செங்கோட்டை முதல் பகவதிபுரம் வரையும், புனலூர் முதல் இடமண் வரையிலும் ரெயில் நிலையங்கள், தண்டவாளம், பாலங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன.
இடமண் முதல் பகவதிபுரம் வரை உள்ள பணிகளில் 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் 30 சதவீத பணிகள் மட்டுமே பாக்கி உள்ளன. 25 பாலங்களில் 21 பாலங்கள் கட்டும் பணிகள் முடிந்து விட்டன.
5 குகைகளில், 3 குகைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் 2 குகைகள் பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக ஒரு குகை அமைக்கும் பணியும், ஒரு பாலம் அமைக்கும் பணியும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்துக்குள் இந்த பணிகள் தொடங்கும். இதுவரை நடந்த பணிகளிலே இந்த பணிகள் தான் கடினமானது. செங்கோட்டை முதல் புனலூர் வரை சிலிப்பர் கட்டைகள், தண்டவாளங்கள் கொண்டு வந்து போடப்பட்டுள்ளன.
அனைத்து ரெயில் நிலையங்களிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரெயில்வே நிர்வாகம் 2017ம் ஆண்டு ஜனவரியில் ரெயில் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 2016ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லம் எம்.பி. பிரேமசந்திரன் கூறினார்.
Thanks ; Malai malar

No comments:
Post a Comment