Saturday, March 30, 2013

கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா: நெல்லை கலெக்டர்...




கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு விரைவில் புதிய தாலுகா அமைக்கப்படும் என்று நெல்லை கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சிவகிரி, கடையநல்லூர் பகுதிகளை மறுசீரமைப்பு செய்து ஒருங்கிணைந்து கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் 60 தாலூகாக்களை பிரிப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பபட்டுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் தாலூகாக்களை பிரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் ஊரக வளர்ச்சித் துறை திட்டங்களை செயல்படுத்த கூடுதலாக ஒரு செயற்பொறியாளரை நியமிக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்களை உள்ளடங்கி காணப்படுகிறது. இத்தலங்களை மேம்படுத்தினால் பக்கத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் கவர முடியும். எனவே, மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை துவக்குவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து தேவைப்பட்டால் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் நடத்தப்படும். அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் அதிகாரிகளின் பரிந்துரையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பெரிய நகராட்சி கடையநல்லூர். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் செந்தூர் பாண்டியன் தேர்தல் வாக்குறுதியாக அதிமுக ஆட்சி வந்தால் கடையநல்லூர் தாலுகாவாக மாற்றப்படும், அரசு கலை கல்லூரி அமைக்கபடும் என்றார் அதன்படி இரண்டுமே இத்தொகுதிக்கு கிடைத்துவிட்டது.


Wednesday, March 27, 2013

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்தவர் கைது கடையநல்லூர் போலீசார் நடவடிக்கை..





போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்தவரை கைது செய்து, கடையநல்லூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

பாஸ்போர்ட் புதுப்பித்தல்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல் அமீன் தெருவைச் சேர்ந்தவர் புது மைதீன் என்பவருடைய மகன் அப்துல் ரசாக் (வயது 50). அவர் கடந்த 1993–ம் ஆண்டு முதல் வெளிநாடுகளுக்கு வேலை சென்று வந்தார்.0 வழக்கமாக ஒருவருடைய பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அப்துல் ரசாக் பாஸ்போர்டும் கடந்த 2003–ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது அவருடைய பாஸ்போர்ட் புதுப்பிக்கும் தேதி வந்தது.

அதன் அடிப்படையில் அப்துல் ரசாக் தன்னுடைய பாஸ்போர்டை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தார். புதுப்பித்தல் தொடர்பான விசாரணைக்கு, கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அப்துல் ரசாக் விண்ணப்பம் வந்தது.

கைது
கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விண்ணப்பத்தில் இருந்த முகவரிக்கு விசாரிக்க சென்றனர். அப்போது விண்ணப்பத்தில் இருந்த முகவரியும், போட்டோவும் வேறு வேறாக இருந்தது. இதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது அப்துல் ரசாக் தனது போட்டோவையும், மைத்துனர் முகமதுகான் முகவரியையும் இணைத்து பாஸ்போர்ட் எடுத்து இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற்றதாக அப்துல் ரசாக்கை போலீசார் கைது செய்தனர்.

கடும் நடவடிக்கை

கடையநல்லூர் பகுதியில் இதுபோன்ற போலி பாஸ்போர்ட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. அப்படி போலி பாஸ்போர்ட்கள் வைத்திருப்பவர்கள் விவரம் தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடையநல்லூர் போலீசார் தெரிவித்தனர்.


Thnx : Dailythanthi

Tuesday, March 26, 2013

கடையநல்லூர் அருகே 1,322 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் செந்தூர் பாண்டியன் வழங்கினார்




கடையநல்லூர் அருகே 1,322 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் செந்தூர் பாண்டியன் வழங்கினார்.
இலவச மிக்சி, கிரைண்டர்
கடையநல்லூர் அருகே உள்ள கிழங்காடு பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தென்காசி உதவி கலெக்டர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கி£ர். செங்கோட்டை யூனியன் தலைவர் முருகையா முன்னிலை வகித்தனார். சிறப்பு திட்ட துணை தாசில்தார் ரவி வரவேற்று பேசினார்.


மக்கள் நலனுக்காக...
விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு 1,322 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கி பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா 3–வது முறையாக முதல்– அமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். சுயநலம் இல்லாத முதல்வர். மாணவர்களின் நலனுக்காக கல்விதுறைக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருபவர், ஜெயலலிதா என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் பாண்டியன், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் பெரியதுரை, தாசில்தார் தேவபிரான், துணை தாசில்தார் ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் மூக்கையா, செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Monday, March 25, 2013

கடையநல்லூரில் கணக்கு வழக்கில்லாத மின்வெட்டு - பொதுமக்கள் அதிர்ச்சி ...




கடையநல்லூரில் கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால்,பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் சென்னை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருந்தது. இதனால், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக, நகர பகுதிகளில் 4 நேரம், கிராம பகுதிகளில் அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் சற்று ஆறுதல் அடைந்தனர்.ஆனால், சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு நேரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திடீர், திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தினமும் சராசரியாக, பத்து மணி நேரம் வரை நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளில் 12 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு ஏற்பட்டது.இதனால், பொதுமக்களும், தொழில் துறையின ரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது; நீர் மின் உற்பத்தி குறைவு, மின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மின்வெட்டு மேலும் நேரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.அடுத்த மாதம் பிளஸ்&2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் தீவிரமாக படித்து வருகின்றனர். இரவில் 7 முதல் 8 மணி வரையும் அதிகாலையில் 5 முதல் 6 மணி 
வரையும் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் படிக்க முடிவதில்லை. ‘இந்த நேரத்தில்தான் மாணவர்கள் படிக்கின்றனர். எனவே அந்த நேரத்தில் மின் தடை செய்வதை தவிர்க்க வேண்டும்என பொதுமக்கள் கோருகின்றனர்.

Saturday, March 23, 2013

கடையநல்லூர் இலங்கை அகதிகள் முகாமில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..



இலங்கையில் தனி ஈழம் அமைக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடையநல்லூர் போகநல்லூரில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு முகாம் தலைவர் ரூபன் தலைமை தாங்கினார். முகாமை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 450-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


கடையநல்லூர் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் 36 சாலைகள்



கடையநல்லூர் பகுதியில், தமிழ் நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் 36 சாலைகள் அமைப்பதற்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சைபுன்னிசா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்.
கவுன்சிலர் இப்ராஹிம், கடையநல்லூர் மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க போதுமான டாக்டரை நியமிக்க வேண்டுமென அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதுகுறித்து பரீசீலனை செய்யப்படும் என்று தலைவர் கூறினார்.
கவுன்சிலர் ஆறுமுகசாமி, கடந்த ஆண்டு கோடைகாலத்தில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே இந்தாண்டு அந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோடை காலத்தை சமாளிக்க 12 அடிபம்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார்.
கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் மூலம் ரூ.6 கோடியோ 94 லட்சம் மதிப்பீட்டில் 36 சாலை பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், நகராட்சியின் கருப்பாநதி, பெரியாற்று படுகை குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து கல்லாறு செல்லும் பாதையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலமும், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Thnx : Dinakaran

Wednesday, March 20, 2013

தாமிரபரணியை இழக்கும் நெல்லை..!! ( ஒரு அதிர்ச்சி செய்தி )


செய்தி : தாமிரபரணியை திசைத் திருப்பி விட்டர்கள் 
எத்தனை நெல்லை மாவட்டக் காரர்களுக்கு இந்த செய்தி தெரியும்?


கூடங்குளம் அணு உலைக்காக தாமிரபரணி நெல்லைக்குள் வராமல்
கல்லிடைக் குறிச்சியில் மடை மாற்றம் செய்யப் பட்டுள்ளது

அம்பை செல்கிறவர்கள் கொஞ்சம் கண்களை திறந்து பாருங்கள்
கல்லிடைக் குறிச்சி ஊருக்கு கொஞ்சம் முன்னால்
பெரிய பாலம் கட்டி முடித்து விட்டார்கள் இன்னும் திறக்க வில்லை
அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்
உண்மை என்னவென்று புரியும்
மிஞ்சிப் போனால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம்
தாமிரபரணியை தண்ணீரோடு நெல்லைக் காரர்கள் பார்க்கலாம்
அதற்குப் பின் வறண்ட தாமிரபரணியைப் பார்க்கப் போகிறோம்

கல்லிடைக்குறிச்சியில் திசைத் திருப்பப் படும் தாமிரபரணி
சேரன்மகாதேவி வழியாக செல்கிறது
சேரன்மகாதேவி அன்பர்கள் இதை கவனித்திருக்க கூடும்
சேரன்மகாதேவி வழியாக களக்காடு செலும் சாலையில்
ஸ்காட் கல்லூரிக்கு அடுத்து மிகப் பெரிய பாலம் கட்ட
அந்த சாலை தோண்டப் படுகிறது
அந்த இடத்தில் நின்றுப் பார்த்தாலே தெரியும்
தாமிரபரணி இனி நெல்லைக்கு போகாது என்று புரியும்
அவ்வளவு பெரிய அகலமான பாதளம் போன்ற தாமிரபரணி செல்லும்
புதிய ஆற்றின் வழிதடம் அமைக்கப் பட்டுள்ளது

அங்கு போக முடியாதவர்கள்
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும்
தேசிய நெடுஞ்சாலையில் சரியாக மூன்றடைப்பு தாண்டவும்
கண்களை திறந்து கிழக்கும் மேற்கும் பார்த்தீர்கள் என்றால்
மிகப் பெரிய புதிய ஆறு தோண்டப் பட்டுவிட்டது
இன்னும் நெடுஞ்சாலையைத் தான் தோண்ட வேண்டும்

இந்த இடங்களில் எல்லாம் ஒரு தகவல் பலகை வைத்திருக்கிறார்கள்
அதில் சாத்தான் குளம், திசையன் விளை சுற்றிலும்
வறட்சியான பகுதிகளுக்கு தாமிரபரணி ஆறு திருப்பி விடும்
மத்திய அரசின் நதி நீர் பங்கீடு திட்டம் என்று அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது இதனால் அறிவிக்கப் படுவது என்வென்றால்
நெல்லை வேளாண் பெரு மக்களின் வயற்றில் அடித்து
கூடங்குளம் அணு உலையை குளிர்விக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


Thanks : www.ilovenellai.com

Monday, March 11, 2013

தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு தோள் கொடுப்போம்...-நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்..




நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள். கட்டாயம் படிக்க வேண்டுகிறேன் !

ஈழப்பிரச்சனை தொடர்பான பதிவுகள் மற்றும் ஏனைய சமூகம் அவலங்களைப் பற்றிய பதிவுகளை உண்மையான உணர்வுகளோடு பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது நன்றிகள் !

எவன் எவனோ சம்பாதிக்கும் திரைப்படங்கள் சபலத்தை உண்டாக்கும் நடிகையின் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நம்மில் பலர், பெரும்பாலும் ஏனோ சமூக பிரச்சனைகள் சம்மந்தமான பதிவுகளை பகிர்வதும் இல்லை அதை எதிர்த்து குரல்கொடுப்பதில்லை. கண்டும் காணாமலும் ஒதுங்கிக் கொள்கிறோம். நமக்கு வரும்வரை அந்த பிரச்சனையின் ஆழமும், அதன் பின்னணியில் ஆயிரக்கணக்கில் மக்கள்படும் துயரமும் அதன் வலியும் நம்மில் பலருக்குத் தெரிவதுமில்லை. அப்படியாகவே பெரும்பாலோனோர் இந்த ஈழப் பிரச்சனையையும் பார்கிறார்கள்.

ஈழம் சார்ந்த தமிழ்ப்பதிவுகளை என் முகநூளில் பகிரையில், நான் ஒரு தமிழ் இனவெறி பிடித்தவன் என்ற வகையில் எனது நண்பர்கள் வட்டாரத்திலேயே பார்த்ததை கண்கூடாக கவனித்திருக்கிறேன். சிலர் சொன்னார்கள் பலர் சொல்லவில்லை. தாய்மொழியை மறப்பதும் தாயை மறப்பதும் ஒன்றுதான் ஆகையால் அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஏன் இந்தப் பக்கத்திலேயே நான் எழுதும் காதல் கவிதைகள் பகிரப்படும் அளவிற்கு சமூக அவலங்களைச் சொல்லும் கவிதைகள், கட்டுரைகள் பகிரப்படுவதில்லை.

நமது தங்கையை, மனைவியை ஒருவன் கேலி செய்தாலே பொறுத்துக்கொள்ள இயலாத நம்மில் பலர், அங்கே மிருகங்கள்போல் கற்பழிக்கப்பட்டு, இறந்த உடல்களில் மார்பை அறுத்து சூறையாடும் இனவெறி மனிதர்களை தட்டிகேட்க மனமற்றவர்களாக இருப்பது வேதைனையைத் தருகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம், சுயநலவாதமா ? இதை எப்படி வரையறுப்பது ? இதைப் பார்க்கையில், மனதிற்குள் ஆயிரம் ஆயுதப்போராட்டம்.

எனது அறிவுக்கு எட்டியவரை, என்று ஒரு மொழியும் மொழி சார்ந்த மக்களும் நசுக்கப்படுகிறார்களோ அன்றிலிருந்தே அந்த மக்களின் அடையாளங்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது. அங்கே கற்பழித்து கொல்லப்பட்டது தமிழர்கள் அல்ல, தமிழ்.

இவ்வாறு கருவருக்கப்படும் ஈழத் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி தேவை என்ற நோக்கில் போராடும் மாணவர்களை ஆதரிக்க, களத்திற்கு செல்ல இயலாவிட்டாலும், குறைந்தபட்சம் அது சார்பான பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அது இன்னும் பத்துபேருக்கு விழிப்புணர்வையாவது ஏற்படுத்தும். இப்போது களத்தில் போராடும் மாணவர்கள் அவர்களுக்காக போராடவில்லை.

மாறாக அவர்களின் போராட்டம் நமக்கானது, நமது இனத்திற்கானது, மொழிக்கானது, தொப்புள்கொடி உறவுகளுக்கானது, வருங்கால சந்ததிக்களுக்கானது என்பதை தயவு செய்து மனதில் வையுங்கள். அப்படி நாம் செய்யத்தவறினால், நமது சந்ததிகளும் வரலாறும் நம்மை இழிவாகப் பேசலாம்.

எதையும் அறியாத ஏறும்புதானே என்று நசுகிப்பாருங்கள். அது சாகும்வரை எதிர்த்துப் போராடியே சாகும். நாம் அன்பு, பாசம், கோபம், இறக்கம், பற்று என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மனிதர்கள். நம்மால் இயன்றதை இயன்றபோது செய்யாமல், நல்லது வேண்டி கடவுளின் சன்னதியில் காத்துக்கிடப்பதில் புண்ணியமில்லை.

மாணவர் சக்தி மகத்தானது. அது ஒரு முறை ஒடுக்கப்பட்டு மறுமுறை எழுந்துள்ளது. மீண்டும் நசுக்க இடம் தராதீர்கள். இது நமக்கான போராட்டம். ஈழ மக்களின் நீதிக்கான போராட்டம், அவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்டுங்கள்.

Original source: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_11.html