Monday, May 27, 2013

அங்காடித் தெரு



நமது கடையநல்லூரில் இருந்து நிறைய பேர் சென்னை தி.நகரில் உள்ள பல ஜவுளி நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள் அவர்களுக்காக இந்த பதிவு ..... (நான் படித்ததில் பிடித்தது...)



சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’
‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’
‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’
‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’
‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’
‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’
‘‘சாப்பாடு?’’
‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’
‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’
‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’
‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா இருக்குமா?’’
‘‘அது பரவாயில்லண்ணேன். நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்குறோமா... அதுதான் உடம்பு எல்லாம் வலிக்கும்.’’
‘‘உட்காரவே கூடாதா?’’
‘‘ம்ஹூம்.. உட்காரக் கூடாது. வேலையில சேர்க்கும்போதே அதை எல்லாம் சொல்லித்தான் சேர்ப்பாங்க. மீறி உட்கார்ந்தா கேமராவுல பார்த்துட்டு சூப்பரவைசர் வந்திடுவார்’’

- யாரோ ஒரு வாடிக்கையாளருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் சூப்ரவைஸர் கேமராவில் பார்க்கக்கூடும். அதனால் அந்தப் பெண் இங்கும் அங்குமாக துணிகளை எடுத்து வைத்தபடியேப் பேசுகிறார்.

‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’
‘‘5,500 ரூபாய்.’’
‘‘வெறும் 5500 ரூபாய்தானா? வேற ஏதாவது முன்பணம், கல்யாணம் ஆகும்போது பணம் தர்றது... அதெல்லாம் உண்டா?’’
‘‘இல்லண்ணே... அது எதுவும் கிடையாது. இதான் மொத்த சம்பளம்.’’
‘‘இதை வெச்சு என்ன பண்ணுவீங்க?’’
‘‘தங்குறது, சாப்பாடு ஃப்ரீ. எனக்கு ஒண்ணும் செலவு இல்லை. சம்பளத்தை வீட்டுக்கு கொஞ்சம் அனுப்புவேன். மீதி பேங்க் அக்கவுண்டுல போட்டுருவேன்’’
‘‘எத்தனை வருஷமா இங்கே வேலைப் பார்க்குறீங்க?’’
‘‘அஞ்சு வருஷம் முடியப் போகுது. அப்பவுலேர்ந்து இதே சம்பளம்தான். இன்னும் ஏத்தலை..’’
‘‘வேலைக்கு சேர்ந்த முதல் மாசத்துலேர்ந்து மாசம் 5500 ரூபாய்தான் சம்பளமா?’’
‘‘ஆமாம்.’’
‘‘யாராச்சும் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களா?’’
‘‘சூப்ரவைசருங்க வாங்குவாங்க. அதுவும் பத்து வருஷம் வேலை பார்த்திருந்தாதான். இல்லேன்னா ஏழாயிரம், எட்டாயிரம்தான்.’’
‘‘லீவு எல்லாம் உண்டா?’’
‘‘மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. அதுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் சம்பளத்துலப் பிடிச்சுக்குவாங்க.’’
‘‘பிடிச்சுக்குவாங்களா? அப்படின்னா லீவே கிடையாதா?’’
‘‘அதான் சொல்றனேண்ணே... லீவு உண்டு. ஆனால் சம்பளம் பிடிச்சுக்குவாங்க. அதனால நாங்க பெரும்பாலும் லீவு போட மாட்டோம்’’
‘‘அப்போ ஊருக்குப் போறது எல்லாம்?’’
‘‘ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாரம் ஊருக்குப் போயிட்டு வருவேன். அதுக்கு லீவு கொடுப்பாங்க. ஆனால் அந்த லீவுக்கும் சம்பளம் கிடையாது’’
‘‘ஊருக்குப் போகும்போது இங்கேருந்து துணி எடுத்துட்டுப் போவீங்களா?’’
‘‘இங்கே விற்குற விலைக்கு வாங்க முடியுமா? வெளியில பாண்டி பஜார்ல எடுத்துட்டுப் போவோம். இங்கே எடுத்தாலும் சில சுடிதார் மெட்டீரியல் கம்மியா இருந்தா எடுப்போம்’’
‘‘உங்களுக்கு விலை குறைச்சு தரமாட்டாங்களா?’’
‘‘ம்ஹூம்... அதெல்லாம் தரமாட்டாங்க. உங்களுக்கு என்ன விலையோ, அதான் எங்களுக்கும்’’
‘‘உங்களுக்கு எப்போ கல்யாணம்?’’
‘‘தெரியலை..’’
‘‘ஊர்ல என்ன பண்றாங்க..’’
‘‘நெல் விவசாயம்..’’
‘‘எவ்வளவு நிலம் இருக்கு?’’
‘‘தெரியலை.. ஆனால் கம்மியாதான் இருக்கு’’
‘‘இங்கே இப்படி கஷ்டப்பட்டு வேலைப் பார்க்குறதுக்குப் பதிலா ‘சரவணா ஸ்டோர்ஸ்ல வேலைப் பார்த்தேன்’னு சொல்லி திருவண்ணாமலையிலேயே ஒரு துணிக்கடையில வேலை வாங்க முடியாதா?’’
‘‘வாங்கலாம். ஆனா இதைவிட கம்மியா சம்பளம் கொடுப்பாங்க. இங்கன்னா வேலை கஷ்டமா இருந்தாலும் சாப்பாடும், தங்குறதும் ஃப்ரீ. சம்பளக் காசு மிச்சம். அங்கே அப்படி இல்லையே..’’
‘‘இங்கே எவ்வளவு பேரு வேலைப் பார்ப்பீங்க?’’
‘‘இந்த ஒரு கடையில மட்டும் பொம்பளைப் பிள்ளைங்க மட்டும் 800 பேர் இருக்கோம்.’’
‘‘மெட்ராஸ்ல எங்கேயாச்சும் சுத்திப் பார்த்திருக்கீங்களா?’’
‘‘ஆவடில எங்க அக்கா வீடு இருக்கு. எப்பவாச்சும் ஒரு நாள் லீவு போட்டுட்டுப் போயிட்டு வருவேன்.’’

- கனத்த மனதுடன் அந்தப் பெண்ணிடம் விடைபெற்று நகர்ந்தோம். அந்த தளம் முழுக்கவும், அடுத்தடுத்த தளங்களிலும் இதேபோன்ற உழைத்துக் களைத்த பெண்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி எழுந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் என்ற அந்த பிரமாண்ட கட்டடம் ஓர் ஆறடுக்கு சவக்கிடங்கு போலதே தோன்றியது.

Thursday, May 23, 2013

கடையநல்லூர் முப்புடாதியம்மன் கோயில் தேரோட்டம்




கடையநல்லூர் முப்புடாதியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று (22.05.2013 ) கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் முப்புடாதியம்மன் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதியுலா நடந்தது. பிரமோற்சவ விழாவில் சிறப்பு பெற்ற தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 3 மணிக்கு தேர்வடம் பிடித்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் "ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் முழங்கிட தேரை இழுத்தனர். நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர வியாபாரிகள், வெள்ளாஞ்செட்டியார் சமுதாயம், விஸ்வபிரம்ம சமுதாயம், தேவர் சமுதாயம், வன்னியர் சமுதாயம், மஞ்சனைக் கோனார், சோழகர், உபாத்தியார்கள் சமுதாயம், வணிக வைசியர் சமுதாயம், யாதவர் சமுதாயத்தினர் மற்றும் கோயில் தக்கார் வெங்கடேஷ், செயல் அலுவலர் தர்மராஜ், கோயில் அலுவலக கணக்கர் கிருஷ்ணன் மற்றும் சமுதாய பெரியோர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Thursday, May 9, 2013

மரணம் தீர்வாகாது - 1063 மதிப்பெண் வாங்கிய பிளஸ்டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை..




பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி.

நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். பேருந்து நடத்துனர். இவரது மனைவி பிரேம பாக்கியம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சிந்துஜா. 17 வயதான இவர் இலஞ்சியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ்டூ படித்திருந்தார். இந்த பள்ளிதான் நெல்லை மாவட்டத்திலேயே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. நன்கு படிக்கக்கூடியவர் சிந்துஜா.

தேர்வில் அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்திருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் இன்று வந்த தேர்வு முடிவைப் பார்த்த அவர் 1063 மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் சிந்துஜா. டாக்டர் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்று பெரும் வருத்தமடைந்தார்.

இந்த நிலையில் திடீரென வீட்டில் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரை மாய்த்துக் கொண்டார் சிந்துஜா. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றாலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மாணவி தற்கொலை

இதேபோல் கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.



இந்த மாணவிக்கு நமது தளம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள் ... 

Saturday, May 4, 2013

கடையநல்லூரில் ஆதார் அட்டைக்கான பணி தொடக்கம்...




நமது கடையநல்லூரில் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி மே 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.. அந்தந்த வார்டுகளுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருகிறது... ஆதார் எனபது நமது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு 12 இலக்க என்னைக் கொண்டிருக்கும் ஒரு அடையாள அட்டை. அனைவரும் உங்கள் பகுதி வார்டு உறுப்பினரிடம் சென்று இதற்க்கான அடையாள நம்பர் ஐ பெற்றுக்கொள்ளவும்..

முக்கிய குறிப்பு :
நீங்கள் செல்லும் போது உங்களது ரேஷன் கார்டு , மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டு மற்றும் உங்களுக்கென ஆதார் அட்டைக்கு கொடுக்கபட்டிருக்கும் அடையாள எண் முதலியவற்றை எடுத்து செல்லவும்.. குறிப்பாக டீ.சர்ட் அணிந்து செல்லக் கூடாது...