Saturday, April 13, 2013

கடையநல்லூர் அருகே பட்டபகலில் பயங்கம் அண்ணன்– தம்பி வெட்டிக் கொலை மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை கும்பல் வழிமறித்து தாக்கியது


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி கிராமம் சந்தை தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முருகேசன் (வயது 43). சிதம்பரபேரியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கடந்த மாதம் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தனக்கு முன்னால் சென்ற முருகேசனை முந்திச் செல்ல முயன்றார், பழனிச்சாமி. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்கள் உரசிச்சென்றன. இதில் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்தில் கையெழுத்து
ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி, அவரது சகோதரர்கள் கனி, குமார், நண்பர் செல்லத்துரை மற்றும் முருகேசன் தரப்பைச் சேர்ந்த ராமச்சந்திரன், சாத்தான், கண்ணன், தங்கராஜ் ஆகியோர் சேர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இது குறித்து இருதரப்பினரும் சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தனர்.
கும்பல் வழிமறித்தது
இந்த நிலையில் நேற்று காலையில் பழனிச்சாமி போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு விட்டு வந்துவிட்டார். அதன் பின்னர் அவரது தம்பிகள் கனி, குமார் மற்றும் செல்லத்துரை கையெழுத்திடுவதற்காக தனது நண்பர் சுடலை என்பவரையும் அழைத்துக் கொண்டு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர்.சிதம்பரபேரியில் இருந்து சிங்கிலிப்பட்டியை கடந்து தான் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அவர்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊரில் இருந்து புறப்பட்டு சிங்கிலிபட்டி ஊருக்குள் சென்றனர். சிங்கிலிப்பட்டியில் ஊருக்குள் திரும்பியபோது அங்கு ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
அண்ணன், தம்பி வெட்டிக் கொலை
இதை சற்றும் எதிர்பாராக 4 பேரும் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் கனி, குமார் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். செல்லத்துரையும், சுடலையும் தப்பி ஓடமுயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களையும் வெட்டி விட்டு ஓடியது. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போலீசார் விரைந்தனர்
இது பற்றி சொக்கம்பட்டி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்– இன்ஸ்பெக்டர்கள் சிவன், சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.பலத்த காயம் அடைந்த செல்லத்துரை மற்றும் சுடலையை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்த கனி மற்றும் குமாரின் உடல் பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் குவிப்பு
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதரி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றம் நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


THANKS : DAILY THANTHI

Wednesday, April 10, 2013

ராஜபாளையம் அருகே வேன் எரிந்து 5 தொழிலாளர்கள் உடல் கருகி பலி



ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எல்.பி.ஜி. கேஸ் பொருத்திய ஆம்னி வேன் மரத்தில் மோதி தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த பெயிண்டர்கள் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.


நெல்லை மாவட்டம், தென்காசி அருகேயுள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவர் பெயிண்ட்டிங் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். முத்தூட் பைனான்ஸ் கம்பெனிக்கு சுவர் விளம்பரங்கள் வரையும் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் முத்தூட் பைனான்ஸ் விளம்பரங்கள் வரைவதற்காக கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் லட்சுமணன் உள்பட 5 பெயிண்டர்கள் செங்கோட்டையில் இருந்து எல்.பி.ஜி. கேஸ் பொருத்திய ஆம்னி வேனில் புறப்பட்டனர். ஆம்னி வேனை லட்சுமணன் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு ராஜபாளையத்துக்கு முன்னதாக சேத்தூர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது ஆம்னி வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் ஆம்னி வேனில் இருந்த எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் வெடித்து ஆம்னி வேன் முழுவதும் தீ பரவியது.

ஆம்னி வேனுக்குள் இருந்த பெயிண்ட் டின்களிலும் தீ பிடித்தததால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி வேன் முழுவதும் முற்றிலுமாக தீ பிடித்து எரிந்தது. இதில் வேனை ஓட்டி வந்த லட்சுமணன் (35) மற்றும் முருகன் (23), கல்யாணி (34), கோபால் (24), முத்துராஜ் (34) ஆகிய 5 பேரும் ஆம்னி வேனுக்குள் உடல் கருதி உயிர் இழந்தனர்.

தகவல் அறிந்த விருதுநகர் எஸ்.பி. மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.