Saturday, April 5, 2014

நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்... - 5



இன்று நம் நினைவுகளில் இடம்பெறப்போவது ... வாடகை சைக்கிள் பயணம் ...
அனைவரின் வாழ்விலும் கண்டிப்பாக இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் ... நான் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களையும் பார்த்த சிலவற்றையும் இங்கே எழுதுகிறேன் நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்தவற்றை தெரிவிக்கவும் ...

நமதூரில் வாடகைக்கென்று இருந்தது ஏகப்பட்ட கடைகள் .. மெயின் பஜார் ல மணி சைக்கிள் கடை.. முதுக்ரிஷ்ணாபுரம் ல சேனையர் தெரு பக்கத்துல விக்னேஷ் கடை , முத்தாரம்மன் கோயில் பக்கத்துல எம்.பீ கடை , பேட்டை ல கூனி சைக்கிள் , கிருஷ்ணபுரம் ல ராஜன் , மாவடிக்கால் ல சாமி கடை .. இன்னும் என்னெனவோ கடைகள் லாம் இருந்துச்சு நம்ம கடையநல்லூர் ல... அதுல நம்ம அனுபவம் அலப்பரை என்ன னு பாக்கலாம்...

ஒரு மணி நேரத்திற்கு சைக்கிளை வாடகைக்கு எடுக்க, சுமார் 3 மணி நேரமாவது, வாடகை சைக்கிள் கடையில காத்துக்கிடக்கனும்.

ஒரு மணி நேரத்துக்கு எடுத்துவிட்டு, ஒரு 5 நிமிசம் கூடிவிட்டால் விடும் டோஸுக்கு பயந்து, பக்கத்து தெருக்களிலையே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கவேண்டும். 10 நிமிசத்துக்கு ஒரு தடவை அந்த வாடகை கடைக்கு போயி “மணியண்ணே, மணி என்ன?” ன்னு கேட்டுக்கேட்டு ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் குறையில்லாமல் சுற்றி கொண்டு போயி நிப்பாட்டும் போது, என்னமோ நம்ம சொந்த வண்டிய, அடுத்தவங்கிட்ட சும்மா கொடுக்குற மாதிரியிருக்கும்.

கோடை விடுமுறையில, பொட்டப் புள்ளைங்க முன்னாடி சீன் காட்ட இந்த மாதிரி ஒரு மணி நேர மிதிவண்டிதான், நமக்கு உற்ற துணையாக இருக்கும். இரண்டு கைய விட்டு ஓட்டுரேன்னு சொல்லி, பல்ல உடச்சிக்கிட்டது, ஸ்பீடா போகிறேன் பாருன்னு, நேர போய் சாக்கடைக்குள்ள மூஞ்சி குப்புற விழுந்தது, கண்ண மூடிகிட்டு வண்டி ஓட்டுறேன் பாருன்னு, வடகம் ஊத்தி வச்சிருக்கும் பாய்களை நாசம் பண்ணுறதுன்னு, வாங்கிய வீரத்தழும்புகள் ரொம்ப, ரொம்ப அதிகம்.

சைக்கிள் செயின் கழண்டு போவது என்பது என்னமோ, அவன் பொண்டாட்டி தங்க செயின் கழண்டு காணாம போனமாதிரி ஒரு பீளிங்க் அந்த கடைக்காரன் கொடுக்குறத பார்க்கனுமே, அட அட அட....உலக நடிகர்கள் எல்லாம் ஒன்னா அவன் மூஞ்சில உக்காந்த மாதிரி, அப்படியிருக்கும். போனதடவ செயின கழட்டுனதால இந்த தடவை எனக்கு தரமாட்டான், அதுனால உன் பெயரசொல்லி வாங்கிட்டு வான்னு, பக்கத்துல இருக்குற நண்பனிடம் காசு கொடுத்து வாங்கிவரச்சொல்வது, அப்படி வாங்கிய வண்டியில, கடைக்காரன் நம்மகிட்ட நல்லா ஏமாந்துவிட்டான் என்ற தெனாவட்டுல, சிரிச்சிக்கிட்டே வண்டிய ஓட்டிக்கொண்டு போனதை எல்லாம் எப்படி நமக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடிகிறது!!!

இப்படியே வருடங்கள் உருண்டோடி, எங்க வீட்டுக்கும் சொந்தமாக ஒரு சைக்கிள் வந்து நின்றது. சின்ன வண்டிகளிலேயே பழக்கப்பட்ட நமக்கு பெரியவண்டியின் மோகம் ஆர்பரிப்பது தப்பில்லை, ஆனால் அதற்கு கால் எட்டவேண்டுமே என்ற அறிவு, ஏதாவது கல்லில் கால்வைத்து ஏறும் போது தெரிவதில்லை, மாறாக இரக்கத்தில் வண்டி வேகமாகமெடுத்து சொல்லும்போது, காலை ஊனமுயலும் போது முடியாமல், நமக்கு மேல் வண்டி வந்து கிடக்கும் போது அறிவது அறியாமை.

புள்ஸ் வைச்சு பழகுறதுக்கு, இந்த அடிமைகளை தேடி அலையிறதுக்கே நமக்கு போதும், போதும்னு ஆயிரும். அப்படியும் மீறி சிக்கினவனை வைத்து, அவனுக்கே நாம தொழில் படிக்குறோம்ங்குறது தெரியாம, டபுள்ஸ் வைச்சி பழகனும். ஒருத்தன கீழ தள்ளிட்டோம், அவ்வளவுதான், நியூஸ் புதிய தலைமுறை சேனலைவிட வேகமாக பரவிவிடும், அப்புறம் ஒருத்தனும் பக்கத்துல வரமாட்டான்.

இந்த காலத்து பசங்க எவ்வளவு கொடுத்து வச்சவங்க, சொந்தமாக ஒரு சைக்கிள் கனவு, ஆறாம் வகுப்பிலையே நிரைவேறிவிடுகின்றது..

ஆனால் கொடுத்து வைகாதவர்களும் கூட இவ்வளவு சந்தோசங்களை இழக்கின்றார்களே ...!!

நினைவுகள் தொடரும் ..

என்றென்றும்
ஐ லவ் கடையநல்லூர் டீம்
யாசீர் & யூ கே ஜி