Saturday, July 18, 2015

நீண்ட இடைவெளிக்கு பிறகு சாரல்: குற்றாலத்தில் மீண்டும் சீசன் களை கட்டியது..





குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் கிட்டத்தட்ட பாதியளவு ஏமாற்றியது. துவக்கத்தின் மூன்று வாரம் சீசன் துவங்குவதற்கு தாமதமானது. தாமதமாக துவங்கியதும் பத்து தினங்கள் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. அதன் பிறகு மீண்டும் வெயில் சுட்டெரித்தது.


கடந்த 15 தினங்களுக்கு மேலாக சாரல் மாயமான நிலையில் நேற்று காலை சற்று வெயில் காணப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென வெயில் மறைந்து ‘குளு குளு’ சூழல் நிலவியது. மேலும் சாரலும் பெய்தது. இதனையடுத்து மதியம் 3 மணியளவில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் கடந்த சில தினங்களாக சீசன் சரியாக இல்லாததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இன்று காலை குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. விடுமுறை நாள் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஐந்தருவி செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மேலும் குற்றாலத்தில் உள்ள படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Photo : Tenkasi Times

No comments:

Post a Comment