Monday, June 29, 2015

சென்னையின் நீண்டகால கனவு திட்டம்.. மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..



சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு வழித்தடம் என மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பால பாதையிலும் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒருசில காரணங்களுக்காக அரசு தொடக்க விழாவை தாமதப்படுத்தியது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானதால் எந்த நேரத்திலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இம்மாத தொடக்கத்திலேயே திறப்பு விழா நடத்தப்படும் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக இது தள்ளிபோனது. இந்நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்க உள்ளார். முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 12 மணியளவில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, தொடர்ந்து கோயம்பேடு, சிஎம்பிடி, அருகம்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சிஎம்ஆர்எல் பணிமனை ஆகியவற்றையும் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைக்கிறார். இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் நகரும் படிகட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம். நாள்தோறும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment