Monday, August 3, 2015

கடையநல்லூர் உட்பட திருநல்வேலி மாவட்ட அரசு, தனியார் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளைவரை நீட்டிப்பு



அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேட்டை அரசு ஐடிஐ முதல்வர் அப்துல்காதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஐடிஐகள் செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீ.கே.புதூர், அம்பை, கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐடிஐ களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 26-6-2015 முதல் 10-7-2015 வரை நடைபெற்றது. பொறிப்பகுதி, கம்மியர் மோட்டார் வண்டி, பற்றவைப்பவர், மின்சாரப் பணியாளர், பம்ப் மெக்கானிக் மற்றும் இயக்குபவர், கம்மியர், தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் பிரிவுகளுக்கு மாணவர்-மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேர்வு பெற்றவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை (ஆக. 4) வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஐடிஐகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

கம்பியாள், பற்றவைப்பவர் போன்ற பிரிவுகளில் சேர 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற தொழிற்பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண், பெண் இருபாலரும் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம் மாதம் 4 ஆம் தேதிக்குள் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அளிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இம் மாதம் 5 ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும்.

இதுகுறித்த விவரங்களுக்கு அரசு ஐடிஐகளை 0462-2342005, 04633-277962, 04634-251108, 04633-280933 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanks : Dinamani

No comments:

Post a Comment