Saturday, August 1, 2015

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம்: உறுப்பினர்கள் தர்னா



கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் சைபுன்னிஷாசேகனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையர் அயுப்கான், பொறியாளர் ஷாகுல்கமீது, துப்புரவு அலுவலர் ஜெயபால்மூர்த்தி, துணைத் தலைவர் ராஜையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 6 மாதங்களாக நகராட்சியில் எவ்வித பணியும் நடைபெறவில்லை. பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் பெரியாற்றுப் பகுதியில் கிணறு வெட்டுவது தொடர்பான தீர்மானம் நகர்மன்றத்தில் கொண்டு வரப்பட்டு பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்து உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, ராஜா ஆகியோர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் அப்துல்லத்தீப்,நயினாமுகமது,முத்தையாபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து, உரிய பதில் தெரிவிக்குமாறு ஆணையரை, நகர்மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டார். கிண்று வெட்டுவது உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

தெருவிளக்குகளை முறையாக சரிசெய்வதில்லை என உறுப்பினர்கள் முத்தையாபாண்டியன், ராஜா ஆகியோர் புகார் தெரிவித்தனர். தெருவிளக்குகளைப் பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார். அப்துல்கலாமின் படத்தை நகர்மன்றக் கூட்ட அரங்கில் வைக்க வேண்டுமென உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் தீர்மானம் கொண்டு வந்தார்.அதை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். முன்னதாக மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Thanks : DInamani

No comments:

Post a Comment