கடையநல்லூர் பகுதியில், தமிழ் நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் 36 சாலைகள் அமைப்பதற்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சைபுன்னிசா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் (பொறுப்பு) ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்.
கவுன்சிலர் இப்ராஹிம், கடையநல்லூர் மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க போதுமான டாக்டரை நியமிக்க வேண்டுமென அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். இதுகுறித்து பரீசீலனை செய்யப்படும் என்று தலைவர் கூறினார்.
கவுன்சிலர் ஆறுமுகசாமி, கடந்த ஆண்டு கோடைகாலத்தில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். எனவே இந்தாண்டு அந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோடை காலத்தை சமாளிக்க 12 அடிபம்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார்.
கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம் மூலம் ரூ.6 கோடியோ 94 லட்சம் மதிப்பீட்டில் 36 சாலை பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், நகராட்சியின் கருப்பாநதி, பெரியாற்று படுகை குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து கல்லாறு செல்லும் பாதையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலமும், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Thnx : Dinakaran

No comments:
Post a Comment